குறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு உளச்சோர்வு போக்கிகள் (Antidepressants)

80% மக்கள் வரை அவர்களின் வாழ்நாளில் கீழ்முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான வேலைகளில் முதுகு வலிக்கான காரணங்களை அறிய முடிவதில்லை. ஆகையால் அவை குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகு வலி என்று குறிப்பிடப்படுகின்றன.

கீழ்முதுகுவலி பொதுவாக தீங்கற்றதும், தானாகவே குறையக்கூடியதுமாகும் . இது பொதுவாக ஆறு வாரங்களில் சிகிச்சை எடுத்தாலோ அல்லது சிகிச்சை இல்லாமலோ குணமாகும்.

எனினும், 30% வரை கீழ்முதுகுவலி உள்ளவர்களுக்கு மீண்டும் மீண்டும் அல்லது விடாப்பிடியான அறிகுறிகள் வரக்கூடும். இதன் விளைவாக,மருத்துவரை சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கீழ்முதுகுவலி உள்ளது. மற்றும் இது பணிக்கு செல்ல முடியாமல் போவதற்கும் பணியில் முன்னதாகவே ஓய்வு பெறுவதற்கும் காரணமாக உள்ளதால் வளர்ச்சிப் பெற்ற நாடுகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுத்துகிறது.

பொதுவாக குறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலி சிகிச்சைக்கு உளச்சோர்வு போக்கிகளை (Antidepressants) மூன்று முக்கிய காரணங்களுக்காக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய் கிறார்கள். அவை: வலி நீங்க, தூங்குவதற்கு உதவ மற்றும் மனச்சோர்வைக் குறைக்க. அதைப்பற்றி முரண்பாடான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இருப்ப தால், உளச்சோர்வு போக்கிகளை முதுகுவலிக்கான சிகிச்சைக்கு மருந்தாக அளிப்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வு உளச்சோர்வு போக்கிகள் குறிப்பிட்ட காரணமில்லாத கீழ்முதுகுவலி மேலாண்மைக்கு பயனுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தது. உளச்சோர்வு போக்கிகளை, மருந்துப்போலியுடன் (எந்த சிகிச்சை மதிப்பும் இல்லாத ஒரு செயலற்ற பொருள்) ஒப்பிட்ட 10 ஆராய்ச்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆய்வுகளில் அனைத்து நோயாளிகளுக்கும் கீழ் முதுகு வலி முதன்மை புகாராக இருந்தது மற்றும் சில பங்கேற்பாளர்களுக்கு கூடுதலாக மனச்சோர்வு அறிகுறிகள் இருந்தது.

தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், பல ஆய்வுகளின் ஒன்றுசேர்த்த முடிவுகளையும் பெருமளவில் நாங்கள் பகுப்பாய்வு செய்து பார்த்தோம்.

உளச்சோர்வு போக்கிகள் மருந்துப்போலிகளை விட வலி அல்லது மனச்சோர்வை குறைப்பதில் சிறந்தது என்று எந்த உறுதியான சான்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. முதுகு வலி சிகிச்சைக்கு உளச்சோர்வு போக்கிகளால் வேறு எவ்வித வெளிப்படையான நன்மைகளும் கிடைக்கவில்லை.

உளச்சோர்வு போக்கிகள் பக்க விளைவுகளை உண்டுபண்னும் எனினும், ஆய்வுகளில் இதனை பற்றிய போதுமான தகவல்கள் அளிக்கப்படவில்லை.

உளச்சோர்வு போக்கிகள் மனச்சோர்வுக்கு ஒரு முக்கிய சிகிச்சை முறையாக உள்ளது ஆகையால், குறிப்பிடத்தக்க மனச்சோர்வு உள்ளவர்கள் இந்த திறனாய்வின் அடிப்படையில் உளச்சோர்வு போக்கிகளை தவிர்த்தல் கூடாது. மற்றும், குறிப்பிட்ட மற்ற விதமான வலிகளுக்கு உளச்சோர்வு போக்கிகள் உதவ முடியும் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

தற்போதுள்ள ஆய்வுகள் கீழ்-முதுகுவலிக்கு உளச்சோர்வு போக்கிகள் தொடர்பான போதுமான சான்றுகள் அளிக்கவில்லை என்று இந்த திறனாய்வு எச்சரிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்த பெரிய மற்றும் மிகவும் தரமான ஆய்வுகள் தேவை. இதற்கிடையில், உளச்சோர்வு போக்கிகள் குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகுவலிக்கு ஒரு நிரூபிக்கப்படாத சிகிச்சையாகவே கருதப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information