பின்புலம்
மக்கள் தொகை வயதாகி கொண்டிருக்கும் வேளையில், எதிர்காலத்தில் முதுமை மறதி நோயால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை நமது சமூகங்களில் அதிகமாக அதிகரிக்கக் கூடும். இது, முதுமை மறதி நோய் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள பராமரிப்பாளர்கள், சமூக பராமரிப்பு மற்றும் காப்பக பராமரிப்பு சேவைகளின் மீதும் பெரும் சுமையை ஏற்படுத்தும். முதுமை மறதி நோய் தீவிரமடைவதை குறைக்க அல்லது தாமதிக்க ஒரு சாத்தியமான வாழ்க்கை முறை காரணியாக உடற்பயிற்சி அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆய்வு பண்புகள்
முதுமை மறதி நோய் கொண்ட மக்களில், அறிதிறன் (ஞாபகம், காரண விளக்கம் அளிக்கும் திறன் மற்றும் இருக்குமிடம் பற்றிய விழிப்புணர்வு போன்ற), அன்றாட வாழ்க்கையின் நடவடிக்கைகள், நடத்தை, உளவியல் சார்ந்த அறிகுறிகள் (மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பதைபதைப்பு போன்ற) ஆகியவற்றை உடற்பயிற்சி திட்டங்கள் மேம்படுத்துமா என்பதை ஆராய்ந்த, மொத்தம் 1067 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 17 சோதனைகளை (தேடல் தேதிகள் ஆகஸ்ட் 2012 மற்றும் அக்டோபர் 2013) இந்த திறனாய்வு மதிப்பிட்டது. இறப்பு, வாழ்க்கைத் தரம், பராமரிப்பாளரின் அனுபவங்கள், மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளின் பயன்பாடு மற்றும் உடற்பயிற்சியின் எந்த பாதக விளைவுகளையும் நாங்கள் ஆராய்ந்தோம்.
முக்கிய முடிவுகள்
முதுமை மறதி நோய் கொண்ட மக்களில் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய திறனை உடற்பயிற்சி திட்டங்கள் மேம்படுத்தக் கூடும் என்பதற்கு மிதமான ஆதாரம் உள்ளது. ஆனால், எங்களால் விளக்கம் அளிக்க முடியாத அளவிற்கு சோதனைகளின்முடிவுகளிடையே அதிகமான வேறுபாடு உள்ளது. அறிதிறன், உளவியல் சார்ந்த அறிகுறிகள் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் மீது உடற்பயிற்சியின் நன்மை பற்றி எந்த ஆதாரத்தையும் ஆய்வுகள் காட்டவில்லை. மேலே கூறப்பட்ட பிற விளைவுகளின் மீதும் சிறிதளவு ஆதாரம் இருந்தது அல்லது எந்த ஆதாரமும் இருக்கவில்லை. பங்கேற்பாளர்களுக்கு உடற்பயிற்சி தீமையளித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பெரும்பான்மையான முடிவுகளின் பின்னேயிருக்கும் ஒட்டுமொத்த ஆதாரத்தின் தரம் 'மிகவும் குறைவான'-தென்று நாங்கள் மதிப்பிட்டோம்.
முடிவுரை
வெவ்வேறான முதுமை மறதி நோய் வகைகள் மற்றும் தீவிரத்தை கொண்ட மக்களுக்கான சிறந்த உடற்பயிற்சி திட்டத்தை பற்றியும் மற்றும் அனைத்து விளைவுகளையும் சிறப்பான-வடிவமைப்பு கொண்ட கூடுதலான சோதனைகளில் முன்மொழிந்து ஆராய்வதன் மூலம் இந்த திறனாய்வின் தரத்தை மேம்படுத்தலாம்.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்