அழுத்த சீழ்ப் புண்கள் (படுக்கை புண்கள், அழுத்தப் புண்கள் மற்றும் அழுந்து புண்கள் என்றும் அறியப்பட்ட) ஆகியவை அதிக அழுத்தம் மற்றும் இழைப்பு விசைகளால் குறிப்பிட்ட பரப்பில் ஏற்படும் திசுச் சேதமாகும். முக்கியமாக, அழுத்த சீழ்ப் புண்கள், கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம், நரம்பு சேதம் அல்லது இரண்டும் கொண்ட மக்களில் ஏற்படும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மேல் படுத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் மூலமான அழுத்தம், பாதிக்கப்பட்ட பகுதியில் பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்து இழப்பிற்கு வழி வகுக்கிறது. மறுநிலைப்படுத்துதல் என்பது அழுத்தத்தை அகற்றுவதற்காகவோ அல்லது உடலின் ஒரு பகுதியில் இருக்கும் அழுத்தத்தை மறுவிநியோகம் செய்யும் பொருட்டோ ஒரு நபரை வேறுபட்ட நிலைக்கு நகர்த்துதல் ஆகும். ஏற்கனவே அழுத்த சீழ்ப் புண்ணை உடைய ஒரு நபர், பாதிக்கப்பட்ட பகுதியில் படுத்தாலோ அல்லது பளு தாங்குவதைத் தொடர்ந்தாலோ, திசுக்கள் இரத்த ஓட்டத்தை இழந்து போகும் மற்றும் காயத்திற்கு பிராணவாயு அல்லது ஊட்டச்சத்து வழங்கீடு இருக்காது. மேலும் காயத்திலிருந்து கழிவு பொருட்கள் அகற்றப்படாது, இவை அனைத்தும் குணமாதலுக்கு தேவையானதாகும். தங்களைத் தாங்களே மறு நிலைப்படுத்திக் கொள்ள இயலாத மக்களுக்கு உதவி தேவைப்படும். மறுநிலைப்படுத்துதலை அழுத்த சீழ்ப் புண் மேலாண்மை உத்தியின் ஒரு அத்தியாவசிய பாகமாக பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச சிறந்த நடைமுறையியல் வாதிடுகிறது. இந்த திறனாய்வில் சேர்ப்பதற்கான தகுதியை பெற்ற எந்த ஆய்வுகளையும் இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை. எனவே, மக்களை மறுநிலைப்படுத்துதல் அழுத்த சீழ்ப் புண்களின் குணமாதல் விகிதத்தில் ஏதாவது வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறியவில்லை.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.