முழங்கை மூட்டின் இணைப்பு பரப்புகள், ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலுமாக பிரிக்கப்பட்ட நிலையே முழங்கை இடப்பெயர்வு ஆகும். ஒரு ஒப்பீட்டளவில், இது ஒரு அபூர்வமான காயமாக உள்ளது. தூக்க மருந்து மற்றும்/அல்லது மயக்க மருந்தின் கீழ் முழங்கை மூட்டு எலும்புகள் மீண்டும் அதன் இடத்தில் பொருத்தப்பட்ட பிறகு, கை பொதுவாக ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ,ஒரு மாவுக்கட்டினால் அசைவற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கும் . கட்டுகள் அவிழ்க்கப்பட்ட பிறகு, முழங்கை இயக்கத்தை மீட்சி செய்யும் நோக்கத்துடன் இயன் முறை சிகிச்சை பெரும்பாலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக, அறுவை சிகிச்சை மிகவும் கடுமையான இட பெயர்வுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது, அவை பொதுவாக, ஒரு எலும்பு முறிவோடு (முறிந்த எலும்பு) தொடர்புடையதாக இருக்கும் .
சாதாரண முழங்கை இடப்பெயர்வு ஏற்பட்டு, அது மீண்டும் சரியான இடத்தில் பொருத்தப்பட்ட (குறைக்கப்பட்ட) மொத்தம் 80 பெரியவர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சோதனைகளை, இந்த திறனாய்வு கொண்டுள்ளது. இரண்டு சோதனைகளும் ஒருதலை சார்பின் அபாயத்தை கொண்டிருந்தது, அப்படியென்றால் அச்சோதனைகளின் முடிவுகள் நம்பகமானதாக இல்லாமல் இருக்கலாம் என்று அர்த்தம்.
ஒரு சோதனை, முழங்கையை இயக்குகிற சிகிச்சையோடு ஒரு மாவுக்கட்டினில் முழங்கையை மூன்று வாரங்களுக்கு அசைவற்ற நிலையில் வைத்திருக்கும் சிகிச்சையை ஒப்பிட்டது. இந்த சோதனையானது, ஒரு வருடக் காலத்தில் முழங்கையின் இயக்க வரம்பின் மீட்பில் அல்லது வலியின் அளவில் இரு தலையீடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதற்கான எந்த ஒரு உறுதியான ஆதாரத்தையும் காணவில்லை. சோதனை பங்கேற்பாளர்கள் எவரும் ஒரு ஸ்திரமற்ற முழங்கையை பெற்றிருக்கவோ அல்லது மற்றொரு இடப்பெயர்வை அனுபவிக்கவோ இல்லை .
மற்றொரு சோதனை, கிழிந்த தசைநார்களை அறுவை சிகிச்சை கொண்டு சீர்ப்படுத்தும் முறைக்கு எதிராக பாரம்பரிய சிகிச்சை முறையோடு ( இரண்டு வாரங்களுக்கு மாவுக்கட்டு கொண்டு அசைவற்ற நிலையில் வைப்பது) ஒப்பிட்டது . தங்களது காயமடையாத முழங்கையோடு ஒப்பிடுகையில், தங்களது காயமடைந்த முழங்கையின் வலு குறைந்துள்ளது என்று கருதிய நோயாளிகளின் எண்ணிக்கையிலும் தங்கள் முழங்கையில் இருக்கும் பலவீனம், வலி அல்லது வானிலை-தொடர்பான கோளாறுகள் போன்றவற்றைக் குறித்து முறையிடும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் இரண்டு குழுக்களுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. மேலும், இரண்டு ஆண்டுகள் பின் தொடர்தலின் போது, முழங்கையின் இயக்க வரம்பு அல்லது பிடி வலிமையில் இரண்டு குழுக்களுக்கிடையே எவ்வித வித்தியாசமும் இல்லை. அறுவை-சிகிச்சை தொடர்பான சிக்கல்களுடன் இருவர் இருந்தனர். சோதனை பங்கேற்பாளர்கள் எவரும் ஒரு ஸ்திரமற்ற முழங்கையை பெற்றிருக்கவோ அல்லது மற்றொரு இடப்பெயர்வை அனுபவிக்கவோ இல்லை.
ஒட்டுமொத்தத்தில், இப்படிப்பட்ட காயங்களுக்கு எவ்வகையான சிகிச்சை அதிக சிறப்பானது என்பதை காண்பிக்க சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளில் இருந்து கிடைத்த ஆதாரம் போதுமானதாக இல்லை என்று இந்த திறனாய்வு முடிவு செய்தது.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.