நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை ஒப்பிடுகையில், நீரிழிவு நோய் கொண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிகமாக மனச்சோர்வு ஏற்படுகிறது, மற்றும் இது மோசமான நோய் முடிவின் முன் கணிப்போடு தொடர்புடையதாய் இருக்கிறது. மனச்சோர்வு கொண்ட நீரிழிவு நோயாளிகளில், மனச்சோர்வு நீக்கி மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகளின் மேலான மருத்துவ சோதனைகளை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. மனச்சோர்வு, இரத்த சர்க்கரை, நீரிழிவு நோய் சிகிச்சை கோட்பாடுகளுடனான இசைவு, நீரிழிவு நோய் சிக்கல்கள், எந்த காரணத்திலாவது ஏற்படும் மரணம்,ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள், மற்றும் ஆரோக்கியம்-சார்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மீதான விளைவுகளை முடிவு செய்வதே இதன் நோக்கமாகும். 1592 பங்கேற்பாளர்களை கொண்ட 19 சோதனைகள் இந்த திறனாய்வில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டன. 1122 பங்கேற்பளர்களைக் கொண்ட எட்டு சோதனைகள், வழக்கமான பராமரிப்போடு உளவியல் சிகிச்சைகளை ஆராய்ந்தன (சிகிச்சை கால அளவு: 3 வாரங்கள் முதல் 12 மாதங்கள் வரை, சிகிச்சைக்கு பின்னான பின்-தொடர் கால அளவு: பூஜ்யம் முதல் ஆறு மாதங்கள் வரை). 377 பங்கேற்பளர்களைக் கொண்ட எட்டு சோதனைகள், போலி மருந்தோடு மனச்சோர்வு நீக்கி மருந்துகளை ஆராய்ந்தன (சிகிச்சை கால அளவு: 3 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரை, சிகிச்சைக்கு பின்னான பின்-தொடர்தல் இல்லை). 93 பங்கேற்பளர்களைக் கொண்ட மூன்று சோதனைகள், இரண்டு விதமான மனச்சோர்வு நீக்கி மருந்துகளை ஆராய்ந்தன (சிகிச்சை கால அளவு: 12 வாரங்கள், சிகிச்சைக்கு பின்னான பின்-தொடர்தல் இல்லை). சுருக்கமாக, நீரிழவு நோயாளிகளில் மனச்சோர்வு வெளிப்பாடுகள் மீது உளவியல் மற்றும் மனச்சோர்வு நீக்கி மருந்துகள் மிதமான ஆனால் நேர்மறையான விளைவை கொண்டிருந்தன. மனச்சோர்வு நீக்கி மருந்துகள், சர்க்கரை அளவுகள் மீது ஒரு நேர்மறையான விளைவை கொண்டிருந்தன; ஆனால், சர்க்கரை அளவுகள் மீது உளவியல் சிகிச்சைகளின் விளைவுகள் தெளிவற்றதாக உள்ளன. நோயாளி-தொடர்பான வாழ்க்கைத் தரம், உளவியல் சிகிச்சை அல்லது மனச்சோர்வு நீக்கி மருந்து சிகிச்சைகள் மூலம் பயனடையவில்லை. ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள், எந்த காரணத்திலாவது ஏற்படும் மரணம், மற்றும் நீரிழிவு நோய் சிக்கல்கள் ஆகியவை போதுமான அளவு ஆராயப்படவில்லை. ஆபத்தான அல்லது கடுமையான பாதகமான விளைவுகள் ஒன்று அரிதாக (மருந்தியல் சிகிச்சைகள்) அல்லது அறிக்கையிடப்படாமல் இருந்திருக்கலாம் (உளவியல் சிகிச்சைகள்). ஒட்டுமொத்தமாக, அநேக குறைந்த-தர சோதனைகள் மற்றும் சோதனை இயல்புகளை பொறுத்தவரையிலான பெரியளவு வகைகள் காரணமாக ஆதாரம் குறைவாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் உள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.