மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) கொண்ட மக்கள், ஞாபகத்திறன் பிரச்னைகளோடு போராடுவர் மற்றும் இது அன்றாட வாழ்க்கையில் சிரமங்களுக்கு வழிவகுக்கும். அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை செய்வதற்கும் மற்றும் மறதியை குறைப்பதினால் பிறரை சாரா நிலையை மேம்படுத்துவதற்கும் ஞாபகத் திறன் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. ஒரு நபர் தன் ஞாபகங்களை சேர்த்து வைப்பதற்கும் மற்றும் திரும்ப கொண்டு வருவதற்கும் குறிப்பிட்ட நுட்பங்களையும் மற்றும் யுக்திகளையும் பயன்படுத்துவதே இத்தகைய புனர்வாழ்வின் உள்ளடக்கமாகும். எனினும், ஞாபகத்திறன் புனர்வாழ்வு, மறதியை குறைக்கிறதா அல்லது அன்றாட வாழ்க்கையின் நடவடிக்கைகளை முன்னேற்றுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம் எஸ்) கொண்ட மக்களில், ஞாபகத்திறன் புனர்வாழ்வின் பலாபலனை ஆராய்ந்த சில நல்ல தரமான ஆய்வுகள் தற்போது உள்ளன. 521 பங்கேற்பாளர்கள் சம்மந்தப்பட்ட, பல வகையான ஞாபகத் திறன் மறுபயிற்றுவிப்பு நுட்பங்களை உள்ளடக்கிய, சிலவை கணினி திட்டங்கள் அல்லது நினைவேடுகள் அல்லது நாட்காட்டிகள் போன்ற ஞாபகத் திறன் சாதனங்களை பயன்படுத்திய எட்டு ஆய்வுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப் பட்டன. மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) கொண்ட மக்களில், ஞாபகத்திறன் புனர்வாழ்வின் பயனை ஆதரிப்பதற்கு இந்த திறனாய்வின் முடிவுகள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை. எனினும், இங்கே திறனாய்வு செய்யப்பட்ட சில முதன்மை ஆய்வுகளின் வரையறுக்கப்பட்ட தரத்தினால், இந்த முடிவுகளை கவனமாக கையாள வேண்டிய நிலை உள்ளது. எந்த அணுகுமுறைகள் மற்றும் எந்த தனி நபர்களுக்கு மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும்என்பதை கண்டுபிடிக்க மேற்படியான சிறந்த-தர ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பதை இந்த திறனாய்வு எடுத்துக் காட்டுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.