நீண்ட-கால மருத்துவ நிலைகள் கொண்ட மக்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலின் விளைவுகள்

பின்னணி

நீண்ட-கால ஆரோக்கிய நிலைமைகள் கொண்ட மக்கள் தங்களின் சுய ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். ஆனால், அதனுடன் தொடர்புடைய சில பணிகள் சிக்கலாக இருக்கக் கூடும், மற்றும் அதற்கு நம்பிக்கை மற்றும் திறன் தேவைப்படுகிறது. மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுவது, அறிகுறிகளைக் கண்காணிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வது அல்லது சீரோடு வைத்துக் கொள்வது, அவர்களின் உணர்வுகளை நிர்வகிப்பது, நடைமுறை பிரச்சினைகளை தீர்ப்பது, எப்போது மற்றும் எப்படி மருத்துவ ஆலோசனை அல்லது சமூக ஆதரவை நாடுவது என்று தெரிந்து வைத்திருப்பது, மற்றும் அவர்கள் தினசரி வாழ்க்கையில் அவர்களின் நிலைமை(களின்) தாக்கத்தை சமாளிப்பது போன்றவை அத்தகைய பணிகளில் அடங்கும். தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பது, தனிப்பட்ட நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் மூலம் ஆதரவு பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அத்தகைய ஆதரவு, நோயாளிகளின் 'தேவைகளை' அங்கீகரிக்கிறது, மற்றும் அவர்கள் தங்களின் சுய ஆரோக்கியத்தை நிர்வகித்து கொள்வதற்கு உதவுகிறது. ஒரு நோயாளி மற்றும் மருத்துவர், ஒரு உரையாடல் அல்லது தொடர் உரையாடல்கள் மூலம் இணைந்து கூட்டாக குறிக்கோள்கள் மற்றும் நோயாளியின் ஆரோக்கிய பிரச்சினைகளின் மேலாண்மை நடவடிக்கைகளை ஒத்துக் கொள்வதே தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பதாகும்.

திறனாய்வு கேள்வி

நோயாளிகள் தாங்களையே தங்கள் குறிக்கோள்கள் மற்றும் செயல் திட்டங்களை அமைப்பதற்கு ஆதரித்து மற்றும் அவர்களின் ஆதரவு தேவைகளை நிர்ணயிக்கும் ஒரு தனிப்பட்ட அணுகுமுறையானது, ஆரோக்கிய வல்லுனர்கள் மட்டும் எடுக்கும் முடிவுகளை விட சிறந்த விளைவுகளுக்கு வழி வகுக்குமா என்பதை அறிய நாங்கள் இந்த திறனாய்வை மேற்கொண்டோம்.

முடிவுகள்

நீரிழிவு நோய், மனநல பிரச்சினைகள், இதய செயலிழப்பு, சிறுநீரக நோய், மற்றும் ஆஸ்துமா போன்ற நிலைமைகள் கொண்ட 10,856 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, ஜூலை 2013 முன் வெளியான 19 சீரற்ற சோதனைகளை இது சம்மந்தமாக நாங்கள் கண்டோம். நோயாளிகளை உள்ளடக்கியும் மற்றும் சுய மேலாண்மையை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட வெவ்வேறு சிகிச்சை தலையீடுகளின் வரம்பை ஆய்வுகள் கண்டன. ஒரே மாதிரியான விளைவுகளை அளவிட்ட ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் இணைத்து மற்றும் சுருக்கமாக தொகுத்து வழங்கி, தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடுதலில் ஈடுபடுதல், உடல் ஆரோக்கியத்தின் சில குறியீடுகளில் சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டியது (நீரிழிவு மக்கள் மத்தியில் நல்ல இரத்த குளுக்கோஸ் அளவு, குறைந்த இரத்த அழுத்தம் அளவீடுகள், மற்றும் கட்டுபடுத்தப்பட்ட ஆஸ்துமா) என்று கண்டோம். இது, அநேகமாக மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறைத்து மற்றும் மக்கள் தங்களின் உடல் நலனை நிர்வகிக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் திறன்களை மேம்படுத்தியது. கொழுப்பு அளவு, உடல் நிறை குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத் தரத்தின் மேல் எந்த விளைவும் இல்லை என்று நாங்கள் கண்டோம். தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலால் ஏதாவது தீங்குகள் எழுந்தன என்பதற்கு ஒரு ஆதாரமும் நாங்கள் காணவில்லை. தயாராக இருத்தல், பதிவு-பகிர்வு, பராமரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மறு ஆய்வு ஆகியவற்றை இணைத்து, மற்றும் ஆரோக்கிய வல்லுநர்களிடமிருந்து தீவிர ஆதரவு மற்றும் நடைமுறை பராமரிப்பில் ஒருங்கிணைக்கப்படும் போது இந்த செயல்முறையானது சிறப்பாக வேலை செய்தது என்று நாங்கள் அறிந்தோம். எனினும், சான்றின் தரம் மிதமாக மட்டுமே இருந்தது, மேலும் ஆராய்ச்சி இந்த கண்டுபிடிப்புகளை மாற்றக் கூடும் என்று பொருள் கொள்ளலாம்.

முடிவுரை

தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பது, சிறப்பான ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிநடத்தும், நோயாளிகளுக்கான பயனுள்ள உதவி வழங்கக் கூடிய நம்பிக்கைக்குரிய அணுகுமுறையாகும் என்று நாங்கள் முடிவுற்றோம். குறிப்பிட்ட நோயாளி குழுக்களில் எந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை காண அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information