திறனாய்வு கேள்வி
இனிப்பு, சாக்லேட், மெல்லும் சவ்வு மற்றும் பற்பசை போன்ற பொருட்களில் இயற்கை இனிப்பூட்டி சைலிடோல் பயன்படுத்துவது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பற்சிதைவை தடுக்க உதவுமா என்பதை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது.
பின்புலம்
பற்சிதைவு உலகம் முழுவதும் 90% வரை குழந்தைகளையும் பெரும்பான்மை பெரியவர்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோய். அது வாழ்க்கைத் தரத்தைப் பாதிப்பதோடு ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அவர்களை பொது உணர்வு இழப்பிற்கு (general anesthetic) உட்படுத்தி பல் சிகிச்சை அளிப்பதற்கான தேவைக்கும் காரணமாக இருக்கலாம். எனினும் முறையாக ஃப்ளோரைடு(flouride) கொண்டுள்ள பற்பசையால் பல் துலக்குவது மற்றும் சர்க்கரை உணவு மற்றும் பானங்கள் சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் இந்நோயை சுலபமாக தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். வாயில் உள்ள உதவியற்ற, பற்சிதைவினை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எவ்வித தொந்தரவுமின்றி விடப்பட்டால் அவை தன் அளவில் பெருகி பற்களின் பரப்புகளில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பான படலங்களை ஏற்படுத்தும். பிறகு சர்க்கரை உணவு அல்லது பானங்கள் சாப்பிடும் பொழுது படலத்தில் உள்ள அந்த கெட்ட பாக்டீரியா பல்சிதைவை ஏற்படுத்தும் அமிலத்தை விளைவிக்கும்.
சைலிடோல் சர்க்கரைக்கு(சுக்ரோஸ்) நிகரான ஒரு இயற்கையான இனிப்பூட்டி. சர்க்கரைக்கு மாற்றாக மட்டும் இல்லாமல், இது வாயில் உமிழ் நீரை அதிகரிக்கசெய்வது மற்றும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைக் குறைத்து வாயில் அமிலம் உண்டாவதை தடுப்பது போன்ற பல் சிதைவைத் தடுக்கும் பண்புகள் கொண்டுள்ளது.
மனிதர்களுக்கு , சைலிடோல் வயிற்று உப்புசம் (bloating), அபானவாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை சாத்தியமான பக்க விளைவுகள் ஆகும்.
ஆய்வு பண்புகள்
தற்போதுள்ள ஆய்வுகளை, காக்ரேன் வாய்ச்சுகாதார குழுவில் உள்ள ஆசிரியர்கள் திறனாய்வு செய்துள்ளனர்.இந்த ஆதாரம் 14 ஆகஸ்ட் 2014 நிலவரப்படியானது. அது 1991 முதல் 2014 வரை வெளியான 10 ஆய்வுகளை உள்ளடக்கியது. இதில் சைலிடோல் பொருட்கள் அல்லது மருந்து போலி(சைலிடோல் இல்லாமல்)பெற்ற அல்லது எவ்வித சிகிச் சையும் பெறாத, 7969 சமவாய்பிட்ட பங்கேற்பாளர்களின் (5903 நபர்கள் பகுப்பாய்வில் இடம்பெற்றனர்) பல் சிதைவு அளவு ஒப்பிடப்பட்டது. ஒரு ஆய்வில் பெரியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் , மற்ற ஆய்வுகளில்1மாதம் முதல்13 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சோதனை செய்யப்பட்ட பொருட்கள், வாயில் வைத்து உறிஞ்சக் கூடியது (சர்க்கரை கலந்த மாத்திரைகள், உறிஞ்சும் மாத்திரைகள் மற்றும் இனிப்புகள்) அல்லது போலி/சூப்பி (pacifier) மூலம் மெதுவாக வெளியிடக்கூடிய மருந்துகள், பற்பசைகள், கரைசல் மற்றும் துடைபான்கள் போன்ற வகையைச் சார்ந்தவை ஆகும்.
முக்கிய முடிவுகள்
ஃபுளூரைடு மட்டும் கொண்ட பற்பசைகளுடன் ஒப்பிடும் பொழுது ஃபுளூரைடுடன் சைலிடோல் கொண்ட பற்பசைகள் குழந்தைகள் பற்களில் பற்சிதைவை 3 ஆண்டு காலத்தில் 13% குறைக்கும் என்பதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன. இதுவரை குழந்தைகளிடம் பக்க விளைவுகள் எதுவும் இருந்ததாக அறிவிக்கப்படவில்லை. கண்டறியப்பட்ட மீதமுள்ள ஆதாரங்களிலிருந்து சைலிடோல் கொண்ட பொருட்களால் குழந்தைகள் அல்லது பெரியவர்களது பல் சிதைவைத் தடுக்க முடியும் அல்லது முடியாது என்று எங்களால் தீர்மானமான முடிவுக்கு வர முடியவில்லை.
சான்றின் தரம்
சிறிய அளவிலான கிடைத்த ஆய்வுகள், நிச்சயமற்ற முடிவுகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்ட முறையில் உள்ள பிரச்சினைகள் காரணமாக இதுவரை உள்ள ஆதாரங்கள், குறைந்தது முதல் மிக குறைந்த தரத்தில் உள்ளன.
மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.