பின்புலம்
நோயாளிகள், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அளவில் பாதி பாகத்தை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர், மற்றும், பலர் சிகிச்சையை முற்றிலும் நிறுத்தி விடுகின்றனர். பரிந்துரைக்கப்படும் மருந்துகளை சிறப்பாக பின்பற்ற நோயாளிகளுக்கு உதவுவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும், மற்றும் பல ஆய்வுகள் இதனை அடையக் கூடிய வழிகளைச் சோதனை செய்தன.
கேள்வி
பின் வரும் கேள்விக்கு பதிலளிக்க, நாங்கள் எங்களுடைய 2007 வருட ஆய்வுரையை மேம்படுத்தினோம்: மருந்துகளை கடைபிடித்து பின்பற்ற நோயாளிகளுக்கு உதவும் வழிகளைச் சோதனை செய்த உயர்-தர ஆய்வுகளின் கண்டுப்பிடிப்புகள் என்ன?
தேடல் உத்தி
ஜனவரி 11, 2013 வரை வெளியிடப்பட்ட ஆய்வுகளை நாங்கள் கண்டு பிடித்தோம். மற்ற தொடர்புடைய ஆய்வுகளைக் கண்டுபிடிக்க, ஆறு கணினிமூல தரவுத்தளங்கள் மற்றும் பிற ஆய்வுரைகளிலிருந்த குறிப்புகளைத் தேடினோம். மேலும், தொடர்புடைய ஆய்வுகள் மற்றும் ஆய்வுரைகளின் ஆசிரியர்களைத் தொடர்புக் கொண்டோம்.
தேர்வு அடிப்படைக் கூறுகள்
மருந்துகளை பின்பற்றுதலை மேம்படுத்துகிறதிற்கு சிகிச்சை தலையீடு பெற்ற ஒரு குழுவுடன், எந்த தலையீடும் பெறாத மற்றொரு குழுவை ஒப்பிட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை (RCT) அறிக்கையளித்த ஆய்வுகளை தேர்வு செய்தோம். குறைந்தது 80 சதவீதம் நோயாளிகளை இறுதி வரை சோதித்து, மருந்துகள் கடைபிடித்தலையோ மற்றும் ஒரு மருத்துவ விளைவையோ (எடுத்துக் காட்டு: இரத்த அழுத்தம்) ஆகிய இரண்டையும் அளவிட்ட சோதனைகளை சேர்த்தோம்.
முக்கிய முடிவுகள்
சேர்க்கப்பட்ட நோயாளிகள், சிகிச்சைகள், கடைபிடித்தல் தலையீடு வகைகள், மருத்துவ பின்பற்றல் அளவீடு மற்றும் மருத்துவ விளைவுகள் ஆகியவற்றில் ஆய்வுகள் பரவலாக வேறுபட்டன. எனவே, புள்ளியியல் பகுப்பாய்வின்முடிவுகளை ஒருங்கிணைத்து பொதுவான தீர்மானங்களை அடைய முடியவில்லை, ஏனேன்றால் அவைகளை ஒப்பிடலாம் என்று பரிந்துரைப்பது தவறான வழிகாட்டுதலாக இருக்கலாம். அதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆய்வின் முக்கிய அம்சங்கள் மற்றும் கண்டுபிடிப்புக்களை நாங்கள் அட்டவணைகளில் வழங்குவதோடு, மிக உயர்-தர ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ள தலையீடு விளைவுகளையும் நாங்கள் விவரிக்கின்றோம். தற்போதைய மேம்படுத்தப்பட்ட ஆய்வுரை, மொத்தம் 182 ஆய்வுகளைக் கொண்டது. இதில் 109 புதிய ஆய்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது. 17 மிக உயர்-தர ஆய்வுகளில் உள்ள மருந்துக்கள் பின்பற்றுதலை மேம்படுத்தும் தலையீடுகள் பல விதமான வழிகளைக் கொண்டு, பொதுவாக சிக்கலானவையாகவே இருந்தன. இவை பெரும்பாலும், குடும்பத்தினர் , நண்பர்கள், அல்லது மருந்தாளுநர்கள் போன்ற துணை சுகாதாரத் துறையை சேர்ந்தவர்களின் மேம்பட்ட ஆதரவோடு அவர்கள் அளித்த கல்வி, அறிவுரை, அல்லது தினசரி சிகிச்சை ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இவற்றில், வெறும் ஐந்து சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை ஆய்வுகள் (RCT) மருந்தை பின்பற்றுதல் மற்றும் மருத்துவ விளைவுகளை மேம்படுத்தியது, மற்றும் அவற்றின் வெற்றிக்கான எந்தவொரு பொதுவான பண்புகளும் அடையாளம் காணப்படவில்லை. ஒட்டுமொத்தமாக, மிகவும் பயனுள்ள தலையீடுகள் கூட பெரிய முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கவில்லை.
ஆசிரியர்களின் முடிவுரை
மருந்துகளை பின்பற்றுவதை மேம்படுத்தும் தலையீடுகளின் சிகிச்சை பண்புகள் மற்றும் அதன் விளைவுகள், ஆய்வுகளிடையே வேறுபட்டிருந்தன. மருந்துகளின் முழு சுகாதார நலன்களை உணர்ந்து கொள்ளும் வகையில், மருந்துகளை சீரான தன்மையுடன் பின்பற்றும் பழக்கத்தை முன்னேற்றுவது எப்படி ? என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. மருந்துகளை பின்பற்றுவதை முன்னேற்றுவதற்கு தேவையான வழிகளை, குறிப்பாக: சிறந்த தலையீடுகள், மருந்துகள் கடைபிடித்தலை அளவிடும் வழிகள், மற்றும் மருத்துவரீதியாக முக்கிய விளைவுகளை வரையறுக்கப் போதுமான நோயாளிகள் அடங்கிய ஆய்வுகள் போன்றவற்றை ஆராய நமக்கு மேலும் நவீன முறைகள் தேவை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.