நரம்பு நோய் வலியென்பது, பாதிக்கப்பட்ட நரம்புகள், தண்டுவடம் அல்லது மூளையிலிருந்து உண்டாகும் வலியாகும். பாதிக்கப்பட்ட திசுக்களிலிருந்து (உதாரணத்திற்கு, கீழே விழுதல் அல்லது ஒரு வெட்டு காயம் அல்லது ஒரு முழுங்கால் மூட்டு வாதம்) ஆரோக்கியமான நரம்புகள் வழியாக கடத்தி செல்லப்படும் வலி தகவல்களிலிருந்து இது வேறுப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலிருந்து வேறுபட்டு நரம்பு நோய் வலிக்கு வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். நரம்பு நோய் வலி கொண்ட சில மக்களில், மனச்சோர்வு அல்லது வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் மருந்துகள் சிலநேரங்களில் மிகவும் திறன் மிக்கதாக இருக்கக் கூடும்.
ஐபூப்ரோபென் (ஒரு ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்து, NSAID) போன்ற மிக பொதுவாக பயன்படுத்தப்படும் வலிநீக்கி மருந்துகள் நரம்பு நோய் வலிக்கு சிகிச்சையளிக்க திறன் மிக்கதாக கருதப்படாது. ஆனால், உலகின் சில பகுதிகளில் நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு அவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன
மே 2015-ல், நரம்பு நோய் வலி சிகிச்சைக்கு வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகளை பயன்படுத்திய மருத்துவ சோதனைகளை நாங்கள் தேடினோம். கீழ் முது வலியோடு நரம்புநோய் வலி பிரச்னையையம் கொண்டிருந்த அல்லது ஷிங்கில்ஸ் எனப்படும் நரம்பு தொற்றுக்கு பின் ஏற்படும் நரம்புநோய் வலி கொண்டிருந்த 251 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு சிறிய ஆய்வுகளை மாத்திரமே நாங்கள் கண்டோம். இந்த 251 பங்கேற்பாளர்களில் 209 பேர், அனுமதி பெறப்படாத மற்றும் பயன்பாட்டிற்கு கிடைக்க பெறாத ஒரு சோதனை மருந்தை சோதித்த ஒரு ஆய்வில் இருந்தனர்.
வலி அல்லது பாதக விளைவுகள் அடிப்படையில், ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் மற்றும் போலி மருந்திற்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை ( மிக குறைந்த தர ஆதாரம்) என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் உதவுமா இல்லையா என்பதை நமக்கு அறிவிக்க நல்ல தரமான ஆதாரம் இல்லை.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்