கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு (ஏ.டி.எச்.டி) உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் மீதைல்ஃபெனிடேடின் பயன்களும் தீமைகளும்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு (ஏ.டி.எச்.டி) உள்ள குழந்தைகளிலும் மற்றும் வளர் இளம் பருவத்தினரிலும் மீதைல்ஃபெனிடேட் உண்டாக்கும் தாக்கங்களை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்புலம்

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே கூடுதலாக காணப்படும் மனக்கோளாறுகளில் ஏ.டி.எச்.டி முதன்மையானது. பெரும்பாலும் மருத்துவச் சிகிச்சை பெறவும் காரணமாக அமைகிறது. ஏ.டி.எச்.டி பாதிப்பு உள்ள குழந்தைகள் தாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து கவனம் செலுத்த சிரமப்படுகிறார்கள். இவர்களிடையே மிகை இயக்கம் (துடிதுடிப்பு, நீண்ட நேரம் இருக்கையில் உட்காந்திருக்க இயலாமை) திடீர் உந்தல்கள் (சிந்திக்காமல் செயல்படுவது) போன்ற அறிகுறிகள் பெருமளவில் காணப்படுகிறன. இவர்களுக்குள்ள கவனக் குறைவினால் ஆசிரியர் கற்பிப்பதைக் கருத்தில் கொள்ள சிரமப்படுகிறார்கள். இதனால் இவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதேபோல, இவர்களில் காணப்படும் நடத்தைச் சிக்கல்கள் காரணமாக குடும்ப உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் நல்லுறவு பேணுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்கள் மற்ற குழந்தைகளை விட தொல்லை தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். ஏ.டி.எச்.டி. பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் வளர்இளம் பருவத்தினருக்கும் பொதுவாக வழங்கப்படும் மருந்து மீதைல்ஃபெனிடேட் ஆகும்.

ஆய்வின் பண்புகள்

ஏ.டி.எச்.டி பாதிப்பு உள்ள 12, 245 குழந்தைள் மற்றும் வளர்இளம் பருவத்தினரை உள்ளடக்கிய 185 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை (சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள்: சோதனையில் பங்குபெறுகிறவர்கள் இரண்டு அல்லது மூன்று சிகிச்சைக்கான குழுக்களாக எந்த ஒழுங்குமின்றி நியமிக்கப் படுகிறார்கள்) நாங்கள் அடையாளம் கண்டோம். பெரும்பான்மையான சோதனைகளில் மீதைல்ஃபெனிடேட் ஒரு மருந்துப் போலியுடன் (மருந்துப் போலி: மீதைல்ஃபெனிடேட் போல தோற்றமும் சுவையும் கொண்ட, ஆனால் செய்வினை அற்ற, வில்லைகள்) ஒப்பிடப்பட்டது. பெரும்பான்மையான சோதனைகள் சிறியவையாகவும் தரம் குறைந்தவையாகவும் இருந்தன. பொதுவாக சிகிச்சை நீடித்த காலம் குறைவாகவே (நெடுக்கம்: 1 முதல் 425 நாட்கள்) இருந்தது. இதனால் மீதைல்ஃபெனிடேடின் நீண்டகாலத் தாக்கங்களை மதிப்பிட முடியாதிருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொ ள்ளப்பட்ட மொத்த185 சோதனைகளில் 72 சோதனைகள் (40%) வர்த்தக நிறுவனங்களால் நிதி பெற்று நடத்தப் பெற்றவை.

இங்கே கூறப்பட்டுள்ள சான்றுகள் 2015 -ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கிடைக்கப் பெற்றவை.

முக்கிய முடிவுகள்

ஏ.டி.எச்.டியின் மைய அறிகுறிகளை மீதைல்ஃபெனிடேட் சீர்திருத்துவதன் வழியாக மிகை இயக்கத்தையும் திடீர் உந்தல்களையும் மட்டுப்படுத்தி குழந்தைகளின் கவனக்குறைவை மேம்படுத்த உதவுகிறது என்பதே இங்கு கண்டறியப்பட்ட முடிவுகள் எடுத்துரைக்கின்றன. பொதுவாக மீதைல்ஃபெனிடேட் குழந்தைகளின் நடத்தையையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது. ஆனால், இச்சோதனைகளின் நற்பேறுகள் மீதைல்ஃபெனிடேட்டினால் ஏற்படும் நன்மைகளின் அளவை துல்லிதமாக பிரதிபலிக்கின்றன என்று உறுதியாகக் கூற இயலாது.

இந்த திறனாய்விற்கு எடுத்துக்கொண்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளின் சான்றுகளின்படி, ஆறு மாதம் வரை மீதைல்ஃபெனிடேட் பாவனையினால் கடுமையான (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்) பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனால், மீதைல்ஃபெனிடேட்டினால் தூக்கக் குறைவு, பசிக் குறைவு போன்ற கடுமை குறைந்தபட்ச பக்கவிளைவுகள் பல இருந்தன.

சான்றின் தரம்

ஏ.டி.எச்.டியினால் உண்டாகும் எல்லா விளைவுகளையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது ஆய்வுச் சான்றுகளின் தரம் மிகக் குறைவாகவே அமைந்திருந்தது. சோதனைகளில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது சாத்தியமாக இருந்தது. பல சோதனைகளின் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப் படவில்லை. சில தாக்கங்கள் பற்றி கூறப்பட்ட முடிவுகள் சோதனைக்குச் சோதனை மாறுபட்டு இருந்தன. இம்மாதியான காரணங்கள் இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகளை நாம் உறுதியாகக் கூறுவதை மட்டுப்படுத்துவதாக உள்ளன.

முடிவுகள்

தற்சமயம் நமக்குக் கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில், ஏ.டி.எச்.டி உள்ள குழந்தைகளும் மற்றும் வளர்இளம் பருவத்தினரும் மிதைல்ஃபெனிடேட்டினால் நன்மையடைகிறார்களா என்பதை உறுதிபடக் கூற முடியாது. மீதைல்ஃபெனிடேட்டினால் தூக்கக் குறைவு, பசிக் குறைவு போன்ற குறைந்தபட்ச தகாத விளைவுகள் பல இருந்தன. கடுமையான கெடுவினை நிகழ்வுகளுக்கான சான்றுகள் காணப்படாத போதிலும், நீண்ட நாள் பாவனையினால் மிதைல்ஃபெனிடேட்டினால் கெடுவிளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகளை அறிந்துகொள்ள மிதைல்ஃபெனிடேட்டை நெடுநாள் பாவிப்பவர்களை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

மிதைல்ஃபெனிடேட் பக்கவிளைவுகளை ஏற்படுவதால் தரம் வாய்ந்த சோதனைகளை வடிவமைப்பது ஒரு பெரும் சவாலான அமைகிறது. சிகிச்சை செய்பவர்கள், ஆய்வாளர்கள், பங்குபற்றுவர்கள் ஆகியோரினாரின் முற்சாய்வுகள் ஒரு சோதனையிலிருந்து பெறப்படும் முடிவுகளின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன. சோதனைகளை வடிவமைக்கும்போது மிதைல்ஃபெனிடேட்டின் பக்கவிளைவுக்களை ஒத்த பக்கவிளைவுகளைக் கொண்ட போலிமருந்தைப் பாவிப்பது இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவும். இவ்வகையான சோதனைகள் "நொசீபோ சோதனைகள்" என்று வழங்கப்படுகின்றன. நன்நெறிகளின் படி ஒழுக, நொசீபோ சோதனைகள் முதலில் வயதுவந்தவர்களில் நடத்தப்பட வேண்டும். மிதைல்ஃபெனிடேட்டினால் வயதுவந்தவர்களிடையே நன்மைகள் காணப்படுமானால் மட்டுமே குழந்தைகள் இம்மாதிரியான சோதனைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: டாக்டர். எம். எஸ். தம்பிராஜா