திறனாய்வு கேள்வி: பக்கவாதத்திற்குப் பின் ஏற்படும் மீட்சியில் (recovery) வழக்கமான பராமரிப்பு அல்லது போலி சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது மீண்டும்மீண்டும் (Repetitive) செய்யப்படும் செயல்வழி பயிற்சியின் விளைவுகள் என்னென்ன ?
பின்புலம்: பக்கவாதம் உடல் இயக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும், குறிப்பாக பல நேரங்களில் உடலின் ஒருபக்க இயக்கத்தை பாதிக்கிறது. பொதுவாக காலப்போக்கில் இழந்த செயல்பாட்டு திறனை சிலர் மீண்டும் பெறுவது வழக்கம் என்றபோதிலும், மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பக்கவாதத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு சிகிச்சை முறை செயல்பாட்டு பணிகளை மீண்டும் மீண்டும் பயிற்சிச் செய்வது (எ.கா. ஒரு கிண்ணத்தை தூக்குவது) ஆகும். இந்த அணுகுமுறை குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் திறனை மேம்படுத்த, நாம் முதலில் எழுதுவதற்குப் பழகும் போது எவ்வாறு அதனை திரும்ப திரும்ப செய்து பயில் கிறோமோ அது போல அந்த பணியினை பலமுறை செய்து பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்னும் எளிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த சிகிச்சை எவ்வளவு நன்றாக வேலைசெய்யும் என்பது மக்கள் எந்த விதமான பயிற்சி முறையை செய்கிறார்கள், மற்றும் அவர்கள் பயிற்சிக்கு செலவழிக்கும் நேரம் போன்றவற்றைப் பொறுத்தே இருக்கும். இதனை பற்றி மேலும் அறிய, மீண்டும்மீண்டும் (Repetitive) செய்யப்படும் செயல்வழி பயிற்சியின் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு தாக்கம் விளைவிக்கின்றன என்றும் நாங்கள் பார்த்தோம்.
ஆய்வு பண்புகள்: நாங்கள் 1853 பங்கேற்பாளர்களை கொண்ட, 33 பொருத்தமான ஆய்வுகளை அடையாளம் கண்டோம். இந்த ஆய்வுகளில் பயிற்சிக்காக பலவிதமான செயல்பாடுகள் உட்படுத்தபட்டிருந்தன. இதில் உட்கார்ந்து எழுதல், நடப்பது, பந்தை தூக்குவது மற்றும் ஒவ்வொரு நிலையத்திலும் வேறுபட்ட செயலினைக் கொண்ட சுற்றுப் பயிற்சி போன்ற பலவிதமான செயல்பாடுகள் அடங்கும். இந்த ஆதாரம் ஜூன் 2016 வரையிலான நிலவரப்படியானது.
முதன்மை முடிவு: கால்களின் செயல்பாட்டுத் திறன், கைகளின் செயல்பாட்டு திறன், நடக்கும் தூரம் மற்றும் நடக்கும் திறனை அளக்கும் அளவு கோட்டில், வழக்கமான இயன்முறை மருத்துவம் அல்லது போலி சிகிச்சையை ஒப்பிடும்போது, உடலின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் செயல் வழி பயிற்சி செய்தவர்களுக்கு முன்னேற்றம் ஓரளவிற்கு இருந்தது. கை மற்றும் கால் செயல்பாடு திறன்கள் ஆறு மாதங்கள் வரை குறையாமல் பேணப்பட்டது. எனினும் பாதகமான நிகழ்வுகள், உதாரணத்திற்கு விழுதல் (falls), பற்றி சரியாக புரிந்துகொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லை. சிறந்த வகை செயல்வழி பயிற்சிகளை நிர்ணயிக்கவும் தொடர்ந்து அளிக்கப்படும் நீடித்த தளராத பயிற்சிகள் நல்ல முடிவுகளை காண்பிக்குமா என அறியவும் மேலும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
சான்றின் தரம்: நாங்கள் கால்களின் செயல்பாட்டு திறன் அளவைகள் , முழங்கை மற்றும் கைகளின் செயல்பாட்டு திறன் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை குறைந்த தரம்உள்ளது என்று வகைப்படுத்தினோம். நடப்பது மற்றும் நடக்கும் தூரம் போன்றவற்றிக்கு மிதமான தரம் என்று நாங்கள் வகைப்படுத்தினோம். குறைந்த அளவிலான பங்கேற்பாளர்கள், ஆராய்ச்சிகளுக்கு இடையே முரணான முடிவுகள் மற்றும் ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை வெளியிடுதலில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் ஏற்பட்ட குறைவுகளால் ஒவ்வொரு விளைவுபயனைப் பற்றிய ஆதாரங்களின் தரம் மட்டுப்படுத்தப்பட்டது.
மொழிபெயர்ப்பு:சி.இ. பி.என்.அர் குழு