திறனாய்வு கேள்வி
இதய செயலிழப்பு கொண்ட மக்களின் மேலாண்மையில் கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவு மற்றும் ஊடற்ற தொலைக்கண்காணிப்பின் விளைவை பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். 41 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். உள்ளடக்கப்பட்ட ஆய்வுகளில் இரண்டு ஆய்வுகள், கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவு மற்றும் தொலைக்கண்காணிப்பு இரண்டையும் வழக்கமான பராமரிப்போடு ஒப்பிட்டு சோதித்தன, ஆதலால் 43 ஒப்பீடுகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரம் ஜனவரி 2015 வரைக்கும் நிலவரப்படியானது.
பின்புலம்
வரையறுக்கப்பட்ட ஆரோக்கிய நிதியுதவி மற்றும் அதிவேகமாக விரிந்து கொண்டிருக்கும் வயதான மக்கள் தொகையின் சூழலில், இதய செயலிழப்பு கொண்டவர்களுக்கு உயர்-தர பராமரிப்பை வழங்குவது ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளுக்கு அதிகரித்தப்படி கடினமாகி கொண்டு வருகிறது. பல்துறை சிறப்பு இதய செயலிழப்பு சிகிச்சை மையங்கள் சிறுபான்மையான மக்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன மற்றும் அடிக்கடியான நோயாளி மறுஆய்விற்கு ஏற்ற கொள்தன்மை இல்லாதவையாக இருக்கின்றன. செலவு, போக்குவரத்து சிரமம் அல்லது இயலாமை மற்றும் நலிவுற்ற நிலை போன்றவற்றால் நோயாளிகள் சிகிச்சை மையங்களுக்கு அடிக்கடி செல்வதற்கு விரும்பாமல் அல்லது அவர்களால் முடியாமல் இருக்கக் கூடும். ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட அணுகலைக் கொண்டுள்ள ஏராள எண்ணிக்கையிலான மக்களுக்கு, கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவு மற்றும் தொலைக்கண்காணிப்பு சிறப்பு இதய செயலிழப்பு பராமரிப்பை வழங்கக் கூடும்.
ஆய்வு பண்புகள்
கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவு அல்லது வீடு தொலைக்கண்காணிப்பின் 41 முழு-உரை சரியிணை-மறுஆய்வு செய்யப்பட்ட ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் உள்ளடக்கினோம். இருபத்தி ஐந்து ஆய்வுகள் (எட்டு புதிய ஆய்வுகள், அதனுடன் இப்போது தொலைக்கண்காணிப்பு என்று வகுக்கப்பட்டுள்ள, முந்தி சேர்க்கப்பட்டிருந்த ஒரு ஆய்வு, மொத்தம் 9332 பங்கேற்பாளர்கள்), கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவை மதிப்பிட்டன, 18 ஆய்வுகள் (ஒன்பது புதிய ஆய்வுகள், மொத்தம் 3860 பங்கேற்பாளர்கள்) தொலைக்கண்காணிப்பை மதிப்பிட்டன, மற்றும் இரண்டு ஆய்வுகள் இரண்டு சிகிச்சை தலையீடுகளையும் மதிப்பிட்டன (பட்டியலிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன).
முக்கிய முடிவுகள்
இதய செயலிழப்பு கொண்ட மக்களுக்கு அவர்கள் வீட்டில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதரவளிப்பது இறப்பு விகிதங்கள் மற்றும் இதய செயலிழப்பு-தொடர்பான மருத்துவமனை சேர்க்கைகளை குறைக்கக் கூடும் என்று இந்த திறனாய்வு எடுத்துக் காட்டுகிறது. அது, மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மற்றும் இதய செயலிழப்பு மற்றும் சுய-பராமரிப்பு பற்றியான அறிவையும் மேம்படுத்தக் கூடும். பெரும்பாலான நோயாளிகள், அவர்கள் முதிர்வயதானவர்களாக இருந்தாலும் கூட, தொழில்நுட்பத்தை பயன்படுத்த கற்றுக் கொள்கின்றனர், மற்றும் இந்த சிகிச்சை தலையீடுகளில் திருப்தி கொள்கின்றனர்.
சான்றின் தரம்
GRADE திட்ட அளவைகளுக்கு ஏற்றவாறு, முதன்மை விளைவுகளுக்கான (அனைத்து-காரண இறப்பு, அனைத்து-காரண மருத்துவமனை சேர்க்கை, மற்றும் இதய செயலிழப்பு-தொடர்பான மருத்துவமனை சேர்க்கை) சான்றின் தரத்தை இந்த திறனாய்வில் நாங்கள் மதிப்பிட்டோம். அவற்றை, மிகவும் குறைவானது (அனைத்து -காரண மருத்துவமனை சேர்க்கைகள்) முதல் மிதமானது வரை (அனைத்து-காரண இறப்பு மற்றும் இதய செயலிழப்பு-தொடர்பான மருத்துவமனை சேர்க்கைகள்) என்று நாங்கள் மதிப்பிட்டோம்.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.