வளர்ந்த நாடுகளில், பழம் மற்றும் காய்கறியை போதுமான அளவு உட்கொள்ளாமை கணிசமான ஆரோக்கிய சுமையை பிரதிபலிக்கிறது. பழம் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது எதிர்காலத்தில் நாள்பட்ட நோயின் ஆபத்தைக் குறைப்பதனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இளம் குழந்தை பருவம், குழந்தைக்கான உணவு பழக்கத்தைத் ஸ்தாபிப்பதற்கான ஒரு முக்கியமான காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. இளம் குழந்தைப் பருவத்தில், பழம் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுதலை அதிகரிக்கக் கூடிய தலையீடுகள், போதுமான அளவு பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளாமையோடு தொடர்புடைய வியாதி சுமையைக் குறைப்பதற்கான ஒரு திறமையான உத்தியை பிரதிபலிக்கிறது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் மத்தியில் பழம் மற்றும்/அல்லது காய்கறிகள் உட்க்கொள்ளுதலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள தலையீடுகளின் தாக்கத்தை மதிப்பிடுவதை இந்த திறனாய்வு நோக்கமாகக் கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட ஆய்வுகளை அடையாளம் காண, நாங்கள் மின்னணு ஆதார நூற் தரவுத்தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளைத் தேடினோம், மற்றும் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள சோதனைகள் மேற்கோள் காட்டிய ஆய்வுகளையும் கருத்தில் கொண்டோம். சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளின் ஆசிரியர்களையும் நாங்கள் தொடர்பு கொண்டு அச்சோதனைகளுக்கு தொடர்புடைய பிற சோதனைகளை அறிந்துள்ளனரா என்று கேட்டோம். ஐந்து மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் மத்தியில் பழம் மற்றும்/அல்லது காய்கறி உட்கொள்ளுதலை அதிகரிப்பதற்கு முக்கியமாக முயன்றதோடு, உட்கொள்ளுதலின் உணவுத்தரம் அல்லது உயிர்வேதியியல் மதிப்பீட்டை உள்ளடக்கிய எந்த ஒரு தலையீட்டின் சீரற்ற சமவாய்ப்பு சோதனையும் தகுதி வாய்ந்ததாக இருந்தது. இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளிலிருந்து, பொருத்தமான தகவல்களை இரண்டு திறனாய்வாளர்கள் தனித்தனியே தேடிப் பிரித்தெடுத்தனர். ஒட்டுமொத்தமாக, 10740 மேற்கோள்கள் சோதிக்கப்பட்டு, ஆய்வு தகுதி அடிப்படையை சந்தித்த 3967 பங்கேற்பாளர்கள் அடங்கிய ஐந்து சோதனைகள் திறனாய்வில் சேர்க்கப்பட்டன. இந்த ஐந்து சோதனைகளில், இரண்டு சோதனைகள், குழந்தைக்கு உணவூட்டும் தலையீடுகளை ஆய்வு செய்தன; இரண்டு, வீட்டிற்கு சென்று சந்திக்கும் தலையீடுகளை ஆய்வு செய்தன; மற்றுமொன்று, பாலர் பருவ பள்ளி- அடிப்படையிலான தலையீட்டின் தாக்கத்தை ஆய்வு செய்தது. குழந்தைகளை திரும்ப திரும்ப ஒரு குறிப்பிட்ட காய்கறிக்கு வெளிப்படுத்துவது , குழந்தைகள் அந்த காய்கறியை குறுகிய காலத்திற்கு (<மூன்று மாதங்கள்) உட்கொள்ளுவதை குறிப்பிட்டளவு அதிகரிக்காது என்பதை சேர்க்கப்பட்டுள்ள ஆய்வு கண்டுபிடிப்புகள் எடுத்துரைக்கிறது. மீண்டும் மீண்டும் செய்யப்படும் உணவு வெளிப்படுத்துதலோடு, ஒரு உறுதியான உணவற்ற பொருள், அல்லாத சமூக வெகுமதியை அளிக்கும் ஒரு தலையீட்டை ஆய்வு செய்த ஒரு சோதனை, இது போன்ற உத்திகள் குறிப்பிட காய்கறியை உட்க்கொள்ளுவதை குறுகிய-காலத்திற்கு (<மூன்று மாதங்கள்) அதிகரிப்பதில் திறன் வாய்ந்ததாக இருந்தது என்று கண்டறிந்தது. வீட்டிற்கு சென்று சந்திக்கும் தலையீடுகள், குழந்தையின் பழம் மற்றும்/அல்லது காய்கறிகளின் உட்கொள்ளுதலை அதிகரிப்பதில், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது திறனற்றதாக காணப்பட்டது. பாலர் பருவ பள்ளி-அடிப்படையிலான தலையீடு, காய்கறி உட்கொள்ளுதலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க தவறினாலும், சராசரியாக குழந்தைகளின் பழ உட்கொள்ளுதலில் சிறிய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த திறனாய்வு, இவ்வயது குழந்தைகளுக்கான பழம் மற்றும் காய்கறி தலையீடுகளின் சீரற்ற சோதனைகளின் போதாமையையும் மற்றும் ஆரோக்கிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கிடைக்கும் வடிவமைப்புகளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்ட திறன்வாய்ந்த தலையீடுகளின் இல்லாமையையும் காட்டுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.